இந்திய மாநிலம் காஷ்மீரின் புல்வாமாவில் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்ந்த இடத்தில் நடைபெற்றுவரும் தடயவியல் ஆய்வில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வியாழனன்று தீவிரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்ட ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து வருகின்றனர். குண்டுவெடிப்பை அரங்கேற்ற செடான் வகை கார் பயன்படுத்தப்பட்டதை கண்டறிந்துள்ள அதிகாரிகள் 60 கிலோ அளவிற்கு ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் தாக்குதல் நடந்த இடத்தில் துணை ராணுவ படைத்தலைவர் பட்நாயக்கர் பார்வையிட்டார்.
காரில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் 150 மீற்றர் சுற்றளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாதுகாப்பு படை வீரர்களின் உடல்கள் 80 மீற்றர் தூரம் வீசப்படும் அளவிற்கு வெடிமருந்தின் தாக்கம் இருந்துள்ளது என முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புல்வாமாவில் தாக்குதல் நடந்த பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது.