வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பிய தம்பதி! அடுத்து வேறு நாட்டுக்கு செல்ல முடிவு.. பின்னர் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்

கோவையை சேர்ந்தவர் மயில்சாமி (37). இவரது மனைவி இந்து (36). மயில்சாமி துபாயில் ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த நிலையில் இந்து ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தற்போது கோவையில் வீட்டில் இருந்தபடியே துபாயில் உள்ள ஒரு கம்பெனியில் ஓன்லைன் மூலம் இந்து வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே டென்மார்க் சென்று வேறு நிறுவனத்தில் வேலையில் சேர தம்பதி முடிவு செய்து இருந்தனர். இ்தற்காக குடும்பத்துடன் தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்ல மயில்சாமி முடிவு செய்தார். இதற்காக கோவையில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஒரு காரில் குடும்பத்துடன் புறப்பட்டனர்.

காரை மயில்சாமி ஓட்டினார். காரின் முன் இருக்கையில் இந்து அமர்ந்திருந்தார். பின் இருக்கையில் இந்துவின் தாயார் கவுசல்யா (60), மயில்சாமியின் மகன் கவுதம் (13), மயில்சாமியின் தம்பி மகள் ரம்யா (11), மயில்சாமியின் உறவினர் கலைவாணி (46) ஆகியோர் இருந்தனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வழியாக கார் சென்று கொண்டிருந்தது. அப்போது மயில்சாமி ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக லொறியின் பின்னால் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மயில்சாமி, அவரது மனைவி இந்து, இந்துவின் தாயார் கவுசல்யா ஆகியோர் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர். காரின் பின் இருக்கையில் இருந்த கலைவாணி, கவுதம், ரம்யா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த பொலிசார், சாலையில் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை தடுப்பு வைக்காமல் லொறியை பழுது பார்த்த அதன் ஓட்டுனர் பாபுவை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.