வங்காள விரிகுடா ஆழ்கடலில் நடந்த திருமணம்!! அழைப்பிதழை பார்த்து அசந்துபோன உறவினர்கள்..!

திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையில் முக்கியமாக நடக்கவேண்டிய ஒரு நிகழ்வு. ஒவ்வொருவருக்கும் திருமணம் சார்ந்த எதிர்பார்ப்புகள் வித்தியாசமாக இருக்கும். திருவண்ணாமலையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் சின்னதுரை என்பவருக்கும், கோயம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்பவருக்கும் திருமணம் நடத்த பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தனது திருமணத்தை சற்று வித்தியசமாக நடத்த வேண்டும் என சின்னதுரை திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக, ஆழ்கடலில் நீச்சல் பயிற்சியை சின்னதுரை மேற்கொண்டு வந்துள்ளார். அதன்படி, தனது திருமணத்தை கடலுக்கு அடியில் வைத்து நடத்த வேண்டும் என்ற தனது விருப்பத்தை பெற்றோர்களிடம் சின்னதுரை தெரிவித்துள்ளார். பெற்றோர்களும் ஒப்புக் கொண்ட நிலையில், புதுச்சேரி பகுதியிலுள்ள ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் ஒருவரை மணமக்கள் அணுகியுள்ளனர். தங்களின் கனவு திருமணத்திற்கு தயாராகும் வகையில் இருவரும் சில நாட்கள் நீச்சல் பயிற்சி மேற்கொண்டனர்.

இந்நிலையில், சென்னை நீலாங்கரை பகுதியில் இன்று காலை பாரம்பரிய உடைகள் அணிந்து படகின் மூலம் கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணமக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு பின் கடலுக்கு அடியில் வைத்து திருமணம் நடைபெற்றது. கடலின் மேற்பரப்பில் இருந்து சுமார் 30 அடி ஆழத்தில் மலர்களை கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் திருமணம் நடைபெற்றது.

பரஸ்பரம் மாலை மாற்றி இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், வித்தியாசமாக நடந்த இந்த திருமணம் பலரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது. அது மட்டுமில்லாமல், இந்தியாவில் ஆழ்கடலில் வைத்து நடைபெற்ற முதல் திருமணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.