ராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் தெரியுமா?

ராகுவும்-கேதுவும் நேர் எதிர் எதிரே நின்று சுழலக்கூடியவை. அவை இரண்டும் ஒரே நாளில் தான் இடம் பெயருவார்கள். 13.02.2019 அன்று பகல் 2.02 மணிக்கு ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. அன்று ராகு கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் மாறுகிறார்கள். இவர்கள் 31-08-2020 வரை இதே இடத்தில் இருப்பார்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசி வாரியாக விரிவாக கணித்து கொடுக்கப்பட்டு உள்ளது.

மேஷம்!
மேஷ ராசி நேயர்களே 13.02.2019 அன்று ராகு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திற்கும் – கேது பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இதனால் சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும் பெயர்ச்சியாக அமையும். மனதினில் அவ்வப்போது விரக்தியான எண்ணங்கள் தோன்றும். எப்போதும் ஒரே மனநிலையுடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பியது கிடைக்காவிட்டாலும், கிடைத்ததை விரும்பினால் வெற்றி நிச்சயம்.எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் நிதானம் காப்பது நல்லது. ராகு, மூன்றாவது ஸ்தானத்தில் அமர்வதால் உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு, சொத்துப் பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. ராகு சற்று சிரமத்தைத் தந்தாலும் பண வரவை ஏற்படுத்தி பொருளாதார நிலையை உயர்த்துவார்.

ராகுவின் இடமாற்றம் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். நிலுவையில் இருந்து வரும் குலதெய்வ வழிபாடு, நீண்ட நாள் பிராத்தனையை நிறைவேற்றுவது போன்றவற்றை இந்த வருடத்தில் செய்து முடிப்பது சிறப்பு.

ரிஷபம்!
ரிஷப ராசி நேயர்களே 13.02.2019 அன்று ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் – கேது பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். ராகு பகவான் தான் அமரும் இடத்தின் வலிமையைக் கூட்டுவார் என்ற கருத்தின்படி இரண்டாம் இடமாகிய தன ஸ்தானம் உச்ச வலிமையுடன் வரும் ஒன்றரை வருட காலமும் செயல்பட உள்ளது. இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். பல்வேறு வழிகளில் பொருள்விரையம் ஏற்படும். இந்த நேரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு அவ்வப்போது சேமிப்பில் ஈடுபட்டு வருவது நல்லது. அசையாச் சொத்துகள் சேரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்து வந்தாலும் கலகலப்பிற்குக் குறைவிருக்காது. இரண்டாம் இடத்து ராகுவினால் பேசும் வார்த்தைகளில் கடுமை வெளிப்படக்கூடும்.

இதுநாள் வரை 9ம் இடத்தில் இருந்து வந்த கேது விலகுவதால் மனதில் இருந்து வந்த விரக்தியான எண்ணங்கள் அகலும். செய்ய வேண்டிய கடமைகளில் சிறிதும் தயக்கமின்றி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனக் குழப்பங்கள் விலகும். அதேநேரத்தில் உங்கள் உடல்நிலையை கேது பகவான் சற்று சிரமத்தை ஏற்படுத்துவார். உடல்நிலையில் ஆரோக்யத்தைப் பராமரிக்க உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

அதேபோல கேதுவின் எட்டாம் இடத்து வாசம் வாழ்க்கைத் துணையுடன் அவ்வப்போது கருத்து வேறுபாட்டினைத் தோற்றுவிப்பதோடு அவரது உடல்நிலையிலும் சற்று சிரமத்தினைச் சந்திக்க வைப்பார். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டிவரும். முடியும். குடும்பக் குழப்பங்கள் உங்கள் மன நிம்மதியைக் பாதிக்கும். அநாவசியச் செலவுகள் கட்டுப்படுத்தப்படும் அதே நேரத்தில் ஆன்மிகச் செலவுகளிலும், தான தருமங்களுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் முன்நின்று செயல்படுவீர்கள்.

எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். யாருக்கேனும் கடன் கொடுத்தால் அது திரும்ப வருவது சற்று கடினமே. யாரை நம்பியும் எந்தவிதமான செயலையும் இந்த வருடத்தில் ஒப்படைக்க இயலாது. சிறு காரியம் முதல் பெரியது வரை அனைத்துப் பணிகளுக்கும் நீங்களே நேரடியாக செயலில் இறங்க வேண்டியிருக்கும். அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த செயல்களின் முடிவு உங்களுக்கு முழுமையான மன திருப்தியினைத் தராது. மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சியானது உங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

மிதுனம்!
மிதுன ராசி நேயர்களே 13.02.2019 அன்று ராகு பகவான் ஜென்ம ராசியிலும் – கேது பகவான் சப்தம ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் வாழ்வியல் நிலையில் ஒரு சில மாறுதல்களை உண்டாக்கும். ராசியில் ராகு இணைவதால் மனதில் அநாவசியமான குழப்பம் உண்டாகும். உங்கள் செயல்பாடுகள் அடுத்தவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். உறவினர்களால் ஒரு சில பிரச்சனைகள் வரக்கூடும். இந்த பெயர்ச்சியால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே சிறிய கருத்து வேற்றுமை வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும். பூர்விக சொத்துக்களால் அனுகூல பலன்கள் ஏற்படும். எதிர்பாராத வகையில் சில உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

ஏழாம் இடத்தில் வந்து அமர உள்ள கேதுவினால் உண்டாகும் நன்மை சத்ரு நாசம் என்பதே. மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். வாழ்க்கைத்துணையின் கருத்துக்களைக் கேட்டு அதன்படி செயல்படுவதன் மூலம் வெற்றிகளைக் காண்பீர்கள். நண்பர்களுடன் அநாவசிய கருத்து வேறுபாடு தோன்றும். சற்று அதிகப்படியான அலைச்சலினால் உடல் அசதி ஏற்படும். குடும்பத்தினரோடு மனமகிழ்ச்சியுடன் செலவழிக்கும் நேரம் குறையும். ஒரு சிலருக்கு தூரதேசப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உடன் பிறந்தோரால் ஒரு சில உபத்திரவங்களை சந்திக்க நேரிடும். பூர்விக சொத்துகளில் சில பிரச்னைகள் வரக்கூடும். புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம்.

பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எதிர்கால நலன் கருதி பண சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. இன்றைய சூழலில் நீங்கள் அதிகம் பேசாது அமைதி காத்து வருவது நன்மை தரும். அந்நிய தேசம் செல்லும் முயற்சியில் கடந்த வருடத்தில் தோல்வி கண்டவர்களுக்கு இந்த வருடம் அதற்கான வாய்ப்பும் நேரமும் கூடி வருகிறது.

கடகம்!
கடக ராசி நேயர்களே 13.02.2019 அன்று ராகு பகவான் விரைய ஸ்தானத்திற்கும் – கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இதனால் கூடுதலான அலைச்சல் உண்டாகும் என்றாலும் நல்ல தனலாபம் உண்டு. ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம். யோசிக்காமல் செய்யும் முதலீடுகளில் பண நஷ்டத்தினை சந்திக்க நேரிடும். அதிக லாபத்திற்கு ஆசைப்படாமல் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

வழக்கு விவகாரங்களில் சமாதானமாகப் போவது நல்லது. வேகத்தினைவிட விவேகமே சிறந்தது என்பது அனுபவப் பூர்வமாக உணருவீர்கள். குடும்பத்தில் நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்வதால் உங்கள் கௌரவம் உயரும். எதிலும் பொறுமையுடன் இருந்தால் மட்டுமே நற்பலனை அனுபவிக்க முடியும். ஆறாம் இடத்தில் அமருகின்ற கேது பகவான் எதிரிகளை வெல்வார். தான் அமரும் இடத்தின் வலிமையைக் குறைப்பவர் கேது என்பதால் கடன் பிரச்னைகள் குறையும்.

நீண்டநாள் உடல் உபாதைகள் நீங்கும். உடல் ஆரோக்யம் பெறும். எவர் ஒருவரையும் சார்ந்திருக்காது தனித்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். ஜனன ஜாதகத்தில் கேதுவின் வலிமை இருக்கப் பிறந்தவர்களுக்கு கேதுவின் அனுக்கிரகத்தால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் ராகு பகவான் சற்று அலைச்சலைத் தந்தாலும் கேது அதற்குண்டான நற்பலன்களைத் தந்து உங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்துவார்.

சிம்மம்!
சிம்ம ராசி நேயர்களே 13.02.2019 அன்று ராகு பகவான் லாப ஸ்தானத்திற்கும் – கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் வாழ்வியல் நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமான மாற்றத்தினை உண்டாக்கும். மனதில் நற்சிந்தனைகளையும், நல்லெண்ணங்களையும் கேது அருள்வார். சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடு ஏற்படும். ஆன்மீக ஞானம் உண்டாகும். கேதுவின் துணையுடன் எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராயும் மனப்பக்குவம் தோன்றும். அதேநேரத்தில் அளவுக்கதிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உங்கள் செயல் வேகத்தினைக் குறைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உங்கள் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

கேது ஐந்தாம் இடத்தில் வந்து அமர்வதால் முக்கியமாக பிள்ளைகளின் நலனில் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உங்களது ஆலோசனைகளும், அரவணைப்பும் அவர்களுக்குத் தேவைப்படும்.

வெற்றியைத் தரும் 11ம் இடத்தில் வந்து அமரவுள்ள ராகு உங்கள் செயல்களில் அசாத்தியமான வெற்றியைப் பெற்றுத் தருவார். மனதில் நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் இணைவதால் எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். ராகு லாப ஸ்தானத்தில் அமர்வதால் சிறப்பான தனலாபம் உண்டு.

பல்வேறு வழிகளில் பொருள் வரவு இருந்து வரும். சேமிப்புகள் உயரும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி ஆதாயம் காண்பீர்கள். 11ம் இடத்து ராகு அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். பெண்கள் வழியில் ஒரு சில நன்மைகள் உண்டு. மொத்தத்தில் வருகின்ற ஒன்றரை வருட காலமும் சிறப்பான நற்பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது.

கன்னி!
கன்னி ராசி நேயர்களே 13.02.2019 அன்று ராகு பகவான் தொழில் ஸ்தானத்திற்கும் – கேது பகவான் சுக ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இந்த பெயர்ச்சியில் நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும். பண தேவைக்காக வெளியில் கடன் வாங்க வேண்டியிருக்கும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும்.

முன் கோபத்தை குறைப்பது எல்லா வகையிலும் நல்லது. கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் தடைகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடியிருக்கும் வீட்டினில் சீரமைக்கும் வேலைகளை தாராளமாக மேற்கொள்ளலாம். குடும்பப் பெரியோர்களின் ஆசியும் கிட்டும். உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதுநாள் வரை 5ம் இடத்தில் இருந்து வந்த கேது விலகுவதால் மனதில் இருந்து வந்த ஒருவித சஞ்சலம் அகலும். நான்காம் இடத்தில் அமருகின்ற கேது பகவான் நல்ல செயல்அறிவினை வழங்குவார்.

பலவிதமான விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராயும் மனப்பான்மை உங்களிடம் இருக்கும். நான்காம் இடத்துக் கேது துஷ்டர்களின் சேர்க்கையைத் தருவார். தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.

எதிர்பாராத நேரத்தில் தோன்றும் பிரச்னைகளை சமாளிக்கும் அறிவு திறன் உங்களிடம் இருக்கும். சொத்து, சுகம் சேருவதோடு வாழ்வியல் தரமும் உயர்வடையும். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சியினால் இதுவரை கண்டிராத புதிய அனுபவங்களைப் பெறுவதன் மூலம் வாழ்வின் அடுத்தபடிக்கு முன்னேறிச் செல்வீர்கள்.

துலாம்!
துலாம் ராசி நேயர்களே 13.02.2019 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கும் – கேது பகவான் தைரிய ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இந்த பெயர்ச்சி உங்களுக்கு நற்பலன்களைத் தரும் வகையில் அமையும். மூன்றாம் இடத்தில் அமரும் கேதுவின் அருளால் எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராயும் மனப்பக்குவம் தோன்றும். மனோ தைரியத்துடனும் செயல்படுவீர்கள். மனதில் நினைத்த காரியத்தை உடனே செயல்படுத்துவீர்கள். கேதுவின் 3-ம் இடத்துச் சஞ்சாரம் உடன்பிறந்தோருடன் சின்ன கருத்து வேறுபாட்டினைத் ஏற்படுத்தும். உங்களது செயல்கள் அடுத்தவர் பொறாமை படும்படி இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. குடும்பப் பெரியவர்களின் விருப்பத்தினை நிறைவேற்ற முடியும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் நடைபெறும் விசேஷங்களில் உங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். முக்கியமான பணிகளை செய்ய யாரையும் நம்பாமல் நீங்களே நேரடியாக காரியத்தில் இறங்குவது நல்லது. புதிய சொத்து வாங்க முயற்சிப்போருக்கு கால நேரம் கூடிவரும். விலகியிருந்த உறவினர்கள் நெருங்கி வருவார்கள்.

ராகு 9ம் இடத்தில் அமர்வது ஓரளவிற்கு முன்னேற்றத்தினைத் தரும். பெற்றோர் மற்றும் உங்கள் வாரிசுகளின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம் ஆகிறது.

9ம் இடத்து ராகு அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். வாகன பயணத்தின் கவனமாக இருக்கவும். மொத்தத்தில் வருகின்ற ஒன்றரை வருட காலத்தில் அசையாச் சொத்துகள் அமைவதோடு உங்கள் வாழ்வியல் தரத்தை உயர்த்துகின்ற வகையில் இருக்கும்.

விருச்சிகம்!
விருச்சிக ராசி நேயர்களே 13.02.2019 அன்று ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கும் – கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். பொதுவாக ராகு தான் அமருகின்ற ஸ்தானத்தின் பலத்தினை உயர்த்தும் வகையில் பலன்களைத் தருவார், கேது அதற்கு நேர்மாறாக தான் இடம்பெறும் ஸ்தானத்தின் பலத்தினைக் குறைத்து பலன்களை உண்டாக்குவார். தன ஸ்தானத்திற்கு கேது வரவிருப்பதால் பொருள்வரவு தடைபடும். விரய ஸ்தானத்திற்கு ராகு இடம்பெயர இருப்பதால் அநாவசியச் செலவுகள் அதிகமாகும்.இதனால் பொருளாதார ரீதியாக சற்று சிரமத்தினைக் காண நேரிடும். குடும்ப உறுப்பினர்களால் அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகளை சந்திப்பீர்கள்.

குடும்ப பிரச்சனைகளை வெளியில் யாரிடத்திலும் சொல்லாமல் இருப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள், உடன்பிறப்புகளால் பிரச்னைகள் தோன்றலாம். எந்தவொரு பிரச்னைக்கும் பொறுமை காப்பதால் மட்டுமே தீர்வு காண முடியும். எட்டாம் இடத்து ராகுவினால் உடல்நிலை ரீதியாக சிறிது சிரமத்தினை சந்திக்கக்கூடும்.

பழைய சொத்து ஒன்றினை விற்க வேண்டிய சூழல் வரும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைக்க மறுப்பார்கள். விலையுள்ள பொருட்களை வாங்குவதில் சற்று கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் தனித்து முடிவெடுக்காமல் பல பேரின் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்வது நல்லது.

ஏதேனும் ஒரு வகையில் தொடரும் பொருள்வரவு உங்களைக் காப்பாற்றும். அநாவசிய பிரச்னைகள் நம்மை நாடி வரும் நேரம் இது என்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு வீண் வாக்குவாதம், தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ராகு கேது பெயர்ச்சியானது உங்கள் ராசிக்கு சுமாரான பலன்களையே தருவார்கள் என்பதால் ராகு- கேது பெயர்ச்சி நாளன்று ஆலயத்திற்கு சென்று சிறப்பு அர்ச்சனை செய்துகொள்வது நல்லது.

தனுசு!
தனுசு ராசி நேயர்களே 13.02.2019 அன்று ராகு பகவான் சப்தம ஸ்தானத்திற்கும் – கேது பகவான் ஜென்ம ராசிக்கும் மாறுகிறார்கள். எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தோன்றும் தடைகள் உங்கள் முயற்சிகளின் வேகத்தினைக் குறைக்கும். எந்த ஒரு சிரமமான விஷயத்தைப் பற்றியும் அதிகம் கவலைப்படாமல் இருந்து வந்த நீங்கள் சிறுசிறு பிரச்னைகளுக்குக் கூட இந்த நேரத்தில் துவண்டு போகும் வாய்ப்பு உண்டு. மனதில் நல்ல பல சிந்தனைகளும், எந்த ஒரு விஷயத்திலும் அதிக ஈடுபாடின்மையும் தோன்றும்.

இதனால் பல சமயங்களில் அடுத்தவர்களுக்காக விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிடையே நெருக்கம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. எதிர்பாராத வகையில் உதவி கிடைக்க பெற்று மேன்மை ஏற்படும். உடல் நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும்.

ராகுவின் சஞ்சார நிலை தேவையற்ற நட்பு வட்டாரத்தை ஏற்படுத்தும். அடுத்தவர்களின் சுபாவம் அறிந்து பழக வேண்டியது அவசியம். ஜென்ம ராசியில் வந்து அமர உள்ள கேது பகவான் விரக்தியான மனநிலையைத் தருவார். கடமையைச் செய்வதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும்.

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முன்னோர்களின் சொத்துகளில் புதிய பிரச்னைகளை சந்திக்க நேரலாம். வரும் ஒன்றரை ஆண்டு காலமும் பெரிதாக பாதிப்புகள் ஏதும் நேராது என்றாலும் புதிய மனிதர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சோம்பல்தன்மைைய முற்றிலுமாகத் துறந்து சுறுசுறுப்பாக உழைத்தால் மட்டுமே இந்த சோதனைக்குரிய காலத்தில் முன்னேற முடியும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

மகரம்!
மகர ராசி நேயர்களே 13.02.2019 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கும் – கேது பகவான் விரைய ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். மனதளவில் சிரமத்தைத் தந்து வந்த கேது 12ம் இடத்தில் அமர்வதால் வீண் குழப்பங்கள் நீங்கி நல்லறிவினைப் பெற முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் உங்களிடம் இயற்கையாகவே இருக்கும். அடுத்த ஒன்றரை ஆண்டு காலம் செய்ய உள்ள சேவை உங்கள் மதிப்பையும், மரியாதையையும் உயர்த்துவதோடு உங்கள் தனிப்பட்ட செல்வாக்கையும் உயர்த்தும். நிகழவுள்ள ராகு கேது பெயர்ச்சி உங்கள் மனநிலையில் பெருத்த மாற்றத்தை உண்டாக்கும்.

6-ம் இடத்திற்கு வந்து அமர உள்ள ராகுபகவான் உடல்நிலையில் சற்று சிரமத்தைத் தோற்றுவிப்பார். வயிறு சார்ந்த உபாதைகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் மட்டுமே உடல் நிலை சரியான நிலையில் இருக்கும். குடும்ப மருத்துவரிடம் அணுகி உங்கள் உடலுக்கு தேவையான ஆலோசனையை பெற்றுக்கொண்டு உடல் உபாதைகளை சரிசெய்து கொள்ளவும்.

ராகு கேது பெயர்ச்சியினால் பெற்றோர் உடல் நிலையில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும். வாழ்க்கைத் துணையின் உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். அநாவசிய செலவுகள் முற்றிலும் குறையும். ராகுவின் அருளால் தொழில் ரீதியாக சிறப்பான தனலாபத்தைக் பெற முடியும். ஓய்வில்லாமல் உழைப்பதற்கான பலனை வரும் ஒன்றரை வருட காலத்தில் காண்பீர்கள். ஆன்மிகம் உள்ளிட்ட பொதுப் பணிகளில் முன்நின்று செயல்பட்டு நற்பெயர் காண்பீர்கள். மொத்தத்தில் இந்த நற்பலன்களைத் தரும் வகையில் அமையும்.

கும்பம்!
கும்ப ராசி நேயர்களே 13.02.2019 அன்று ராகு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் – கேது பகவான் லாப ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். 5ம் இடத்து ராகுவினால் சிந்தனையில் குழப்பங்கள் தோன்றும். மனதில் தேவையற்ற பயம் வந்து போகும். இதனால் உடல்நிலையில் லேசான பாதிப்புகள் உருவாகலாம். உடலில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும். வெளி உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

எவரையும் எடுத்தெறிந்து பேசாமல், எல்லோரையும் அனுசரித்து செல்லும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ளவும். 5-ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ள ராகுபகவான் எதிர்பாராத இடமாற்றத்தைத் தோற்றுவிப்பார். குடும்பத்தினருடன் இருக்கும் வாய்ப்புகள் குறையும். ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

உத்யோகத்தில் உங்கள் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும். தொழில், வியாபார ரீதியாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய ஆலோசனைகள் கிடைக்க பெறுவீர்கள்.

அநாவசிய செலவுகள் கட்டுப்படுத்தப்படும். அதேநேரத்தில் 11ம் இடத்தில் இருக்கும் கேது தான தருமங்களுக்காக அதிகம் செலவழிக்க வைப்பார். மொத்தத்தில் வரவுள்ள ராகு கேது பெயர்ச்சியானது சிந்தனையில் குழப்பத்தைத் தந்தாலும், உங்கள் மதிப்பையும், மரியாதையையும் கூட்டுவதோடு சமூகத்தில் புகழைப் பெற்றுத் தரும்.

மீனம்!
மீன ராசி நேயர்களே 13.02.2019 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்திற்கும் – கேது பகவான் தொழில் ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். உங்கள் ராசிக்கு தொழிலைக் குறிக்கும் 10ம் இடத்திற்கு கேது வர உள்ளார். தொழில் ஸ்தானத்தில் அமரும் கேது தொழில் முறையில் சிறிது சிரமத்தினைத் கொடுத்தாலும், நல்லதொரு அனுபவங்களைத் கற்றுத்தரும்.

ராகுவின் சாதகமான சஞ்சாரம் புதிய சொத்துகளைச் சேர்க்கும். குடியிருக்கும் வீட்டினில் பராமரிப்பு பணிகளைச் செய்வது, வீட்டினை அழகு படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் முடிவிற்கு வரும். உறவினர்களிடம் மனஸ்தாபம் உண்டானாலும் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாளடைவில் உங்களிடம் உறவினர்களிடம் மீண்டும் வந்து சேருவர். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.

இந்த ராகு கேது பெயர்ச்சி, உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும். பொதுத்தொண்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்நின்று செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை விளைவிக்கும் வகையில் சிறப்பாகவே அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.