பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த டிவி நடிகை அனிகா உள்பட 3 பேர் கடந்த மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். கைதான நடிகை அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் நிமிர்ந்து நில் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த நடிகை ராகிணி திவிவேதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்திருந்த இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் சிரஞ்சீவி சார்ஜா குறித்த தனது பேச்சை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் மேக்னா, இதுபற்றி கர்நாடக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் கடந்த சில நாட்களாக தேவையில்லாமல், மறைந்த என் கணவர் சிரஞ்சீவி சார்ஜா பெயர் அடிபடுகிறது. இதனால் கடுமையான மனவலியை அடைந்தேன் என கண்ணீருடன் கூறியுள்ளார். மேலும் அவர் பெயரை பயன்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இந்திரஜித் லங்கேஷ் என் பேச்சால் மேக்னா ராஜ் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்க தயார் என கூறியுள்ளார்.