பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை. கடந்த 5-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நுரையீரல் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர, உயிர்காக்கும் உபகரணங்கள் வழியாக, ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை குணப்படுத்திய மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடன், எம்.ஜி.எம்., மருத்துவ குழு, எஸ்.பி.பி.,க்கு தீவிர சிகிச்சை அளித்துவருகிறது. மருத்துவமனை வட்டாரம் கூறுகையில், ‘அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி வருகின்றன. நுரையீரல் பாதிப்பினை சீர் செய்ய தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்.
அதற்கு, ஒரு வாரம் அல்லது, 10 நாட்கள் ஆகலாம். உலகம் முழுவதிலுமுள்ள ரசிகர்களின் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்குமென நம்புகிறோம்’ என்றனர். இந்நிலையில், எஸ்.பி.பி.,யின் மகன் சரண், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘எனது தந்தையின் உடல் நிலை கடந்த, 48 மணி நேரமாக மிகவும் சீராக இருப்பது, நம்பிக்கை தருகிறது. அனைவரின் பிரார்த்தனைக்கும், அன்புக்கும் நன்றி’ என, குறிப்பிட்டுள்ளார்.