கடலூர் மாவட்டத்தின் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகள் ரம்யா. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். ரம்யாவை அவரது வீட்டுக்கு அருகே வசித்து வந்த ராஜேசேகர் என்ற நபர் ஒருதலையாகக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. ராஜசேகர் கடந்த 6 மாதங்களுக்கு முன் ரம்யா வீட்டுக்குச் சென்று பெண் கேட்டதாகவும், ஆனால் ரம்யாவும், அவரது குடும்பத்தினரும் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினைகளை அடுத்து ரம்யா மீது ராஜசேகர் ஆத்திரத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று ரம்யா பணியாற்றும் பள்ளிக்குச் சென்ற ராஜசேகர் வகுப்பறையில் இருந்த ரம்யாவின் கழுத்தை கத்தியால் அறுத்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனால் மாணவர்களும் சக ஆசிரியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து ராஜசேகர் தப்பியோடினார். தகவல் அறிந்து வந்த பொலிசார் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதோடு, தலைமறைவான ராஜசேகரை தேடி வருகின்றனர்.