டிக்டாக் வீடியோ பதிவாள கணவரே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வரும் டிக் டாக்கில் இளம் தலைமுறையினர் எந்நேரமும் மூழ்கியுள்ளனர். டான்ஸ் ஆடுவது, மிமிக்ரி என அவர்கள் செய்யும் அக்கப்போருக்கு அளவே இல்லை. சில அடாவடிகள் சீன் காட்டுவதாக நினைத்து சிக்கலில் சிக்குகின்றனர். இளம்பெண்கள் யாரும் சமூகவலைதளங்களில் தங்களின் போட்டோவையோ வீடியோவையோ போட வேண்டாம், அப்படி செய்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என குடும்பத்தாரும் பொலிஸாரும் பல அறிவுரைகளை கூறினாலும் சிலர் கேட்காமல் இருக்கின்றனர்.
கோவை குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். செண்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் நந்தினி என்ற பெண்ணிற்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கனகராஜும் நந்தினியும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே நந்தினி, தனியார் பொறியியல் கல்லூரியில் கூலி வேலை செய்து வந்தார்.
நந்தினி டிக்டாக் வீடியோ எடுப்பதில் அதிக ஈடுபாடு உடையவராக இருந்துள்ளார். மேலும் செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கனகராஜுக்கும் நந்தினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் கனகராஜ், நந்தினியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரம் செல்போன் பிசியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நந்தினி வேலை செய்யும் கல்லூரிக்கு நேரில் சென்ற கனகராஜ் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கனகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியை சரமாரியாக குத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.