சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவருக்கு உலகம் முழுதுமே பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. கடந்த 20ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்தபடி கார் ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படம், அதற்கு அடுத்த நாள் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் தனது மகள் சவுந்தர்யா, மருமகன் விசாகன், பேரனுடன் இருக்கும் ஒரு புகைப்படமும் வெளியாகியிருந்தது. இதையடுத்து, ரஜினிகாந்த் முறையாக இ-பாஸ் வாங்கித்தான் சென்றாரா என்ற கேள்வி பரவலாக எழுந்தது.
அதன்தொடர்ச்சியாக, சென்னை தேனாம்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்துக்கு இ-பாஸ் பெற்றுத்தான் ரஜினிகாந்த் சென்றார் என்ற தகவலை மாநகராட்சி உறுதிபடுத்தி இதற்கான ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அவருக்கு இ-பாஸ் வழங்கப்பட்ட தேதியாக ஜூலை 22ஆம் தேதியும் (நேற்று), பயண தேதியாக ஜூலை 23ஆம் தேதியும் (இன்று) குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ரஜினி கேளம்பாக்கத்தில் இருந்தது 20,21ஆகிய தேதிகளாகும். அந்த தேகதிக்கான இ-பாஸ் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், நேற்று இ-பாஸ் எடுத்து விட்டு, பயண தேதியாக இன்றைய தினத்தை குறிப்பிட்டு, எப்படி அவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் கேளம்பாக்கம் சென்றார் என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. அத்துடன் சிஸ்ட்டத்தை சரி செய்ய வேண்டும் என்று கூறும் ரஜினியே இவ்வாறு சிஸ்ட்டத்தை மீறாலாமா என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு வருகிறது.