போபாலிலுள்ள Kaliasot அணையில் குளித்துக்கொண்டிருந்த அமித் யாதவ் (30), திடீரென தொடையில் ஏதோ கவ்விப் பிடிப்பதை உணர்ந்தார். அவர் சுதாரிப்பதற்குள் அவரைக் கவ்விப்பிடித்த முதலை ஒன்று அவரை தண்ணீரின் ஆழத்துக்குள் இழுத்துச் சென்றது. உடனே சற்றும் யோசிக்காத அவரது நண்பர் கஜேந்திர யாதவ், சட்டென தண்ணீருக்குள் குதித்து, நண்பனை பின்தொடர்ந்து நீந்தியுள்ளார். நண்பனை பிடித்து இழுப்பது என்னவென தடவிப்பார்க்க, அது ஒரு முதலை என்பது தெரிந்ததும், தன் கையிலிருந்த செல்பி ஸ்டிக்கால் முதலையைக் குத்து குத்தென்று குத்த, முதலையின் பிடி நழுவியது.
முதலை அங்கிருந்து விலகிச் செல்ல, தன் நண்பனை இழுத்துக்கொண்டு நீந்தி கரைக்கு வந்த கஜேந்திர யாதவ், உடனே ஆம்புலன்சை அழைத்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அமித் யாதவுக்கு தொடையில் 30 தையல்கள் போடப்பட்டுள்ளன.