ஒரு சாதாரண பெண்ணின் அந்த நாள் அனுபவம் – இளகிய மனதுடையவர்கள் தவிர்க்கவும்-முழு விபரம் உள்ளே !!

அன்பானவனே!

“நலமா? … என் ஒரு நாள் அனுபவத்தை இந்தக் கடிதத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ஒரு பெண்ணின் அங்கங்கள் என்னென்ன அளவில் இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாய். என் மார்பகங்கள், என் இடை மற்றும் உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் அறிந்தே வைத்திருப்பாய். தினம் தினம் நீ தெரிந்துகொள்ள விருப்பத்துடன் இருக்கிறாய். அதிகம் தேடப்படும் வாசகங்களில் ஒன்றாக இணையத் தேடுபொறிகள் எங்கள் அந்தரங்கங்களின் பெயர்களைத்தான் சொல்கின்றன.

என் நண்பனாய், கணவனாய், தகப்பனாய், காதலனாய், சகோதரனாய் இன்னும் எல்லாமுமாய் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட உனக்கு பெயர் போட்டு கடிதம் எழுதும் அளவுக்கான சுதந்திரத்தை இன்னும் சமூகம் வழங்கவில்லை. ஏன் என் சொந்த சகோதரியிடமே மனம்விட்டுப் பகிர முடியாததுதானே அந்தரங்கம்?

வீட்டில் யாருக்கும் நான் படிப்பதில் விருப்பமில்லை.திருமணம் முடித்துவிட்டால் ஒரு சுமை முடிந்ததென்று நினைத்திருந்தார்கள்.நானோ,அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தேன். தனியார் நிறுவனங்களின் வேலை நேரங்கள், வீட்டு வேலையும், அலுவலக வேலையும் இணைத்துச் செய்யும் வாய்ப்பைக் கொடுப்பதில்லை என்பதால், அரசு வேலை அல்லது வங்கிப் பணி என்பதே எனது தேர்வாக இருந்தது.

 

தேர்வு நாள் நெருங்க நெருங்க எனக்கு பதட்டம் அதிகரித்தது. படிப்போமா? தேர்ச்சியடைவோமா? என்பதல்ல பிரச்சனை. சென்ற மாதத்தில் ‘மாதவிடாய் முடிந்த தேதியிலிருந்து எண்ணிக் கொண்டிருக்கிறேன். சரியாக 29 ஆம் நாள் தேர்வு”. அடுத்த மாதவிடாய் ஆரம்பிக்கலாம். தயாராக ‘விஸ்பர்’ வாங்கிக் கொண்டேன். அகலமானதும், நாள் முழுவதும் சுதந்திர உணர்வும் கொடுக்கும் என விளம்பரத்தில் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். எதுவும் அறிகுறி இல்லை என்ற ஆசுவாசமான மனநிலையோடே பேருந்தில் ஏறினேன். ஜன்னலோரத்தை லயிக்கும் பேருந்துக் கவிதைகளை நினைக்கவும் முடியாத நரகம் அது.நெரிசலில் பிதுங்கி நின்றேன். கழுத்துக்கு அருகில் யாரோ மூச்சு விடுவதுபோல இருந்தது. கூட்ட நெரிசலில் இதையெல்லாம் எப்படித் தவிர்ப்பது. திரும்ப விரும்பினேன்.அது நீயாக இருக்கக் கூடாது.

 

ஆம் நீயில்லை. ஒரு அக்கா அருகில் நின்றிருந்தார். வெகு தொலைவில் நின்றபடி, என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாய் நீ. அடிவயிற்றில் மெதுவாக மாற்றங்கள் தெரியத் தொடங்கின. விஸ்பர், கைப்பைக்குள் இருக்கிறது. ‘தேர்வு மையத்துக்குச் சென்றதும் பாத்ரூமுக்குத்தான் முதலில் செல்ல வேண்டும்.’ மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

வேகமா எறங்குமா” அதட்டல் குரல். அது நீதான். கொஞ்சம் மெதுவாய்ச் சொல்லியிருக்கலாம். விசும்பலாய் இருந்தது, ஆனாலும், இதுவெல்லாம் பழகிவிட்டது

சாலை மருங்கில் இருந்த மரங்களை வெட்டியிருந்தார்கள். நடைபாதைக்கான இடத்தில் நீ பேசியபடி நின்றிருந்தாய். அந்த சிகரெட்டை புகைப்பதில் உனக்குத்தான் எத்தனை ஆனந்தம். அதில் என்னதான் இருக்கிறது?. அசையாமலும், வேகமாகவும் பாத்ரூமைத் தேடி நடக்க ஆரம்பித்தேன். அவ்வளவு பெரிய கல்லூரி அது. எல்லோரும் அவரவர் எண்களுக்கான தேர்வு அறையை பார்ப்பதில் ஆர்வமாக இருந்தார்கள். ஒருவழியாக பாத்ரூமை அடைந்துவிட்டேன். குமட்டலாக இருந்தது. பொதுக் கழிப்பிடங்கள் எப்படி இருக்குமென்பது உனக்கும் தெரியும்தானே?. ஒரு நாள்தான் தேர்வு, இதற்காக புதிய கழிப்பிடமா கட்டுவார்கள்?. அங்கு கொஞ்சமும் தண்ணீர் இல்லை. இதற்காகத்தான் கைப்பையில் தண்ணீர் பாட்டில் எப்போதும் வைத்துக் கொள்கிறேன்.


நான் ஏற்கனவே தாமதமாகிவிட்டேன். தேர்வு அறைக்குள் மிகத் தாமதமாகவே நுழைந்தேன். விஸ்பர் மாற்றியிருப்பினும், உதிரப் போக்கு உறுத்திக் கொண்டுதான் இருந்தது. அரிப்பும், அசூசையும் கொண்ட உணர்வு அது. ‘சே, இந்த உடலோடுதான் வாழ வேண்டுமா?’. நான் என்னையே சில சமயங்களில் வெறுக்கிறேன்.

4 மணி இருக்கும், தேர்வு முடிந்துவிட்டது. திரும்பிச் செல்வதற்கும் அதே பேருந்துதானா? … என நினைக்கும்போது நீ உன் புதிய இருசக்கர வண்டியை முறுக்கிக் கொண்டிருந்தாய். கேட்டால் மாட்டேனென்றா சொல்லப் போகிறாய். ஆனாலும், கேட்பதற்கு தயக்கமாய் இருந்தது. யாரென்றறியாத ஒருவனிடம் என் வேண்டலுக்கும், யாரெனத் தெரியாத பெண்ணுக்கு செய்யும் உன் உதவிக்கும் சமூகம் வைத்திருக்கும் பெயர் வேறு.

 

பேருந்து நிறுத்தத்திலேயே கூட்டம் அதிகமாய் இருந்தது.

லாவகமாக ஜன்னலில் கைவைத்து, படிக்கட்டில் கால் மிதித்தபடி ஒவ்வொரு பேருந்தின் பின் வாசலிலும் நீ தொங்கியபடி பயணம் செய்தாய். என்னால் அது முடியாதே. அதுவும் இந்தச் சூழலில், ஆட்டோவில் போவது உத்தமம். நீதான் ஆட்டோவில் அமர்ந்துகொண்டிருந்தாய். தனிப் பெண்ணாக ஒரு ஆட்டோவில் உன்னோடு எப்படி வருவது? … தினமும் நாளிதழ்களில் படிக்கும் செய்திகள் நினைவுக்கு வந்து அச்சமூட்டின. வீட்டிற்கு தாமதமாகச் செல்வதும், சரியான முடிவில்லை. நல்ல வேளை, என்னிடம் அலைபேசி இருக்கிறது. அவசரத்துக்கு யாரையாச்சு அழைக்க வாய்ப்பிருக்கிறது.

 

தனியே ஆட்டோவில் அமர்ந்தேன். பேச்சுத் துணைக்கு ‘வாட்ஸ் ஆப்’பில் நீ ஆன்லைனில் இருந்தாய். என்னென்னவோ பேசினாய். பயணத்தின் தனிமையை விளக்கியபடி பேசிக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு வந்தபோது, உதிரப்போக்கு அதிகமாகத் தொடங்கியது. எனக்கென ஒரு அறை இல்லாத வீடு அது. உடைமாற்றி குளித்துட்டு, நைட்டி அணிந்துகொண்டேன். ஓரளவு ஓய்வாய் இருந்தது.

வீட்டில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. அது என்ன நிகழ்ச்சியென்று நினைவில்லை. பேசியது நீதான், “அத்தினி, சித்தினி, பத்தினி” என பெண்கள் குறித்து விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாய். நகைச்சுவை நிகழ்ச்சியொன்றில் நீயே தோன்றி பெண்ணுடையில் சாகசங்கள் செய்துகாட்டினாய். இப்படி ஒரு நாள் நீ உடை உடுத்தும்போது, “விஸ்பரைக்” கொடுக்க வேண்டும். அதனை எப்படி அணிவதென்று நீ விழிப்பாய் என நினைத்துச் சிரித்துக் கொண்டேன்.

இரவும் உதிரப்போக்கு நின்றபாடில்லை. அலைபேசியில் உன் குறுஞ்செய்தி வந்தது. சில நிமிடங்கள் பேசலாம் என பதிலனுப்பினேன். யாராவது பேசிக் கொண்டிருந்தால், உறுத்தலையேனும் மறக்கலாம் அல்லவா. மணி ஒன்றரை தாண்டிவிட்டது. நம் உரையாடலும் தொடர்ந்துகொண்டேயிருந்தது. நீ நீயாக இருந்தபடியும், நான் நானாக இருந்தபடியும் பேசினோம். கடைசியாக உன் கேள்வி நினைவிருக்கிறது “நள்ளிரவு தாண்டிப் பேசுகிறாயே? நீ என்னைக் காதலிக்கிறாயா?”.

எதுவும் சொல்லாமல் உறங்கிப் போனேன். ஒருவேளை நாம் காதலிக்கவும் செய்யலாம். இந்தக் கடிதத்தில் பகிரப்பட்ட என் ஒரு நாளை உன்னால் புரிந்துகொள்ள முடியுமென்றால்…

இப்படிக்கு

அவள்….

Leave a Reply

Your email address will not be published.