சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவன் தனது வியக்க வைக்கும் திறமையால் ஏ. ஆர். ரகுமான் உட்பட பலரிடம் பாராட்டு பெற்று வருகிறார். அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு அதிவேகமாக பியானோ வாசித்து உலகம் முழுவதும் உள்ள பல இசைக் கலைஞர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். அமெரிக்காவில் நடந்த தி வேல்ட்ஸ் பெஸ்ட் (The World’s Best) என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட சிறுவன் லிடியன், அதிவேகமாக பியானோ வாசித்து அனைவரையும் அசத்தினார். 1900 ம் ஆண்டில் ரஷ்யன் இசைக்கலைஞரால் உருவாக்கப்பட்ட பிளைட் ஆப் பம்பிள்பி (Flight of the Bumblebee) என்ற இசையை வாசித்து அனைவரையும் ஆச்சர்யமடையச் செய்தார் லிடியன்.
விரல்களின் வேகம் இருந்தால் தான் இந்த இசையை வாசிக்க முடியும் என்ற நிலையில் . அந்த இசையை சராசரியாக மனிதர்கள் வாசிப்பதைவிட இரண்டு மடங்கு வேகத்தில் வாசித்து அசத்தினார் லிடியன். முதலில் அந்த ஒரிஜினல் இசைக்கு உரிய வேகத்திலேயே வாசித்த லிடியனை அனைவரும் எழுந்து பாராட்ட தன்னால் இதைவிட வேகமாக வாசிக்க முடியும் என்ற சிறுவன், நிமிடத்துக்கு 208 பீட்ஸில் அந்த இசையை வாசித்து அனைவரையும் ஆச்சரியமடையச் செய்தார்.
ஆனால் அடுத்தக்கட்டமாக 208 பீட்ஸ் வேகத்தை விட 325 பீட்ஸ் வேகத்தில் வாசித்ததில் அரங்கமே அதிர்ச்சியில் உரைந்து போனது. அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து கைதட்ட, லிடியனின் தந்தை வர்ஷன் ஆனந்தத்தில் கண்கலங்கி நெகிழ்ந்துபோனார்.
லிடியன் விரல்களின் வேகத்தை பார்த்து அசந்த ஹாலிவுட் பாடகர் ஜேம்ஸ் கார்டன் தான் பார்த்த இசை நிகழ்ச்சிகளில் இதுதான் சிறந்தது ட்வீட் செய்து புகழ்ந்துள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்த இசைப்புயல் ஏஆர் ரகுமானும் லிடியனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.