எத்தனை கடுமையானது தெரியுமா? சி.ஆர்.பி.எப். வேலை? படித்துப் பாருங்கள்…! அப்போது தான் தெரியும்…!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில், இது வரை 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிர் இழந்துள்ளனர். ஈடு செய்ய முடியாத பேரிழப்பு இது! இந்த மரணங்ளைப் பற்றி, வெறும் அனுதாபப்படுவது மட்டும் நம் வேலையில்லை. அவர்களுடைய பணி எத்தகைய கடினமானது? என்பது பற்றித் தெரிந்தால், அவர்களைப் பார்த்த உடனே, உங்களுக்கு சல்யூட் அடிக்கத் தோன்றும். ஒரு சி.ஆர்.பி.எப். வீரரைத் தேர்வு செய்யும் போது, உடற் தகுதித் தேர்வுகள் வைப்பார்கள். முதலில், அவர்கள் 5 கி.மீ. துாரத்தை 24 நிமிடத்திற்குள் ஓடிக் கடக்க வேண்டும். இது தரையில் அல்ல. தார்ச் சாலையில்.

தார்ச் சாலையில் ஓடுவது, பார்க்க வேண்டுமானால், சாதாரணமாகத் தோன்றும். ஓடுபவர்களுக்குத் தான், அதன் வேதனை தெரியும். கால் மூட்டுகள் இரண்டும், கடுமையான இறுக்கத்தினால், துவக்கதில் மரண வலி தரும். அதைத் தாங்கிக் கொண்டு, ஓடிப் பழகி, அந்தக் கால்கள் செட் ஆன பின்னால் தான், அவர் துணை ராணுவ வீரராகத் தேர்வு செய்யப் படுவார். இத்துடன், தற்போது ஆன்லைன் தேர்விலும் வெற்றி பெற வேண்டும். மருத்துவப் பரிசோதனை எல்லாம் முடிந்து, அந்த வீரர் தேர்வு செய்யப்பட்டவுடன், அவர் இந்தியாவின் மீது பற்றுள்ளவராக மாற்றப் படுவார். இந்த தேசத்திற்காக, எந்த நேரத்திலும், உயிரை விடும் அளவிற்கு, மனதளவில், தேர்ச்சி பெற வைத்து விடுவர்.

பின், சம எடையுள்ள ஒரு நபரைத் துாக்கிக் கொண்டு. 5 கி.மீ. துாரம் நிற்காமல் ஓடுவதற்கும் பயிற்சி அளிப்பார்கள். போரின் போது, நம்முடன் வந்த வீரர், அடிபட்டுக் கிடந்தால், எதிரிகளின் கைகளில் சிக்காமல், அவரைக் காப்பாற்றிக் கொண்டு, முகாமில் சேர்க்க வேண்டியதும், அவரது கடமை.  வெறும் அரை லிட்டர் தண்ணீரை மட்டும் வைத்துக் கொண்டு, 15 கி.மீ, துாரம், அவர்கள் கரடு முரடான பாதையில் நடந்து, பயிற்சியாளர் சொன்ன துாரத்தை, குறிப்பிட்ட நேரத்திற்குள் அடைய வேண்டும்.

அதற்குள் பசி, தாகத்தைப் பற்றி எல்லாம் அவர்கள் நினைத்துப் பார்க்கவே முடியாது. இது ஒரு சாம்பிள் தான். இதைப் போல் இன்னும் எத்தனையோ கடுமையான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப் படுகின்றன. எந்த நேரமும், மரணத்தை எதிர் நோக்கி தயாராகக் காத்திருக்கும், அந்த வீரர்களைக் கையெடுத்துக் கும்பிடுங்கள். ஏனென்றால், அவர்கள் தான், உண்மையான எல்லைக் காவல் தெய்வங்கள்..!

Leave a Reply

Your email address will not be published.