இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டு காலமாக இசையமைத்து வருகிறார். மேஸ்ட்ரோ என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு, இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான, பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
கடந்த 40 ஆண்டு காலமாக பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள ஸ்டூடியோ 1 ல் இசையமைத்து வந்துள்ளார். இதற்காக பிரசாத் ஸ்டூடியோ அதிபர் எல்வி பிரசாத் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் தற்போது பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வந்த எல்வி பிரசாத்துக்கு அடுத்தபடியாக இருந்த பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத் அதற்கு இணக்கம் காட்ட வில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த தகவலும் வெளியானது. இதையடுத்து இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ இடையேயான சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. வழக்கை முடிக்க உயர்நீதிமன்றமும் ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் இன்று பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் மீது இளையராஜா காவல் துறையில் கூடுதல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் என்னவென்றால் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது அறையில் இசைக்கருவிகள், இசைக்குறிப்புகள் திருட்டு போனதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.