ஆழ்கடலில் மூழ்கினாலும் ஆளைக் காப்பாற்றலாம்… அசத்தும் தமிழ் மாணவர்கள்! உலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் கடலில் சிக்கிச் சராசரியாக சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர்வரை சாவதுத் தெரியவந்தது. அப்படி சிக்குகிறவர்களைக் காப்பாற்றும் எண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் ‘அட்டானமஸ் பிரவுனிங் ரெஸ்க்யூ சிஸ்டம்’என்கிற கருவி. சென்னை வெங்கடேஸ்வரா கல்லூரி மாணவரான முகமது சபியோடு அஜய் கார்த்திக், கிஷோர் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் இணைந்து இந்தப் புதிய சாதனத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

கடற்கரைகளில் உள்ள கலங்கரைவிளக்கம் போன்றதுதான் இந்த சாதனம். இதில் தானியங்கி கேமராவும் குழாய்களில் லைஃப் ஜாக்கெட் எனப்படும் மிதவைகளும் சுருட்டி வைக்கப்பட்டுள்ளன. கடற்கரைகளின் அருகில் இந்தக் கருவியை மின்சார தந்திக் கம்பம் போல நிலை நிறுத்தி விட்டால் போதும், நீருக்குள்ளிருந்து உதவி கேட்டு யாரேனும் கைகளை அசைப்பது தெரிந்தால், இதிலுள்ள ரிஃப்லெக்டர் கருவி அதைக் கவனித்து தானியங்கி கம்ப்ரசருக்கு உத்தரவிடும். இதனை அடுத்து காற்றூதி லைஃப் ஜாக்கெட்டைத் தள்ளும்.
இது தவிர சுற்றிலும் இருக்கிறவர்களுக்குக் கேட்கும் வண்ணம் அபாயச் சங்கு ஒலியையும் இந்தக் கருவி எழுப்ப ஆரம்பித்து விடும். அடுத்தது கடற்கரையில் இதை வைத்துப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். “அதற்கு நிறைய செலவு பிடிக்கும். அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்”என்று சொல்லுகிறார்கள் இந்த துடிப்பான இளம் விஞ்ஞானிகள். இந்தக் கண்டுபிடிப்புக்காக சர்வதேச அளவு வரைக்கும் பரிசுகளையும் வென்றிருக்கிறார்கள்! 1. கிஷோர் 2. ஜெயஸ்ரீ 3. அஜய் கார்த்திக் 4. முகமது சபி.
