திருச்சி மாவட்டம் நவலூர் பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவர் தனது சித்தியுடன் சேலத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தியான வகுப்பிற்கு சென்று வந்துள்ளார். அதன் பிறகு கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் 2010ம் ஆண்டு தியான வகுப்பில் சேர்ந்து அங்கேயே தங்கி பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், தமது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெங்களூரு ராம்நகர் காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதுதொடர்பான வழக்கு, பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரு பொலிசார் முறையாக விசாரிக்கவில்லை என அப்பெண்ணின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது சங்கீதாவின் தாயார் அனுப்பிய கடிதத்தின் மீது உள்விவகாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கர்நாடக மாநில உள்விவகார செயலாளருக்கு மத்திய உள்விவகார அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், தலைமறைவாகி வெளிநாட்டில் உள்ள நித்தியானந்தாவை பிடிக்க சர்வதேச பொலிசாரின் உதவியை நாடவேண்டும், அவரை கைது செய்து வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.