உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. பிரபல பாலிவுட் திரையுலகின் உச்சநட்சத்திரமான நடிகர் அமிதாப் பச்சனுக்கு கடந்த 11-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த பரிசோதனையில் மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த 18 ஆம் தேதி அதிகாலை ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், இருவரும் அமிதாப் மற்றும் அபிஷேக் சிகிச்சை பெற்று வந்த நனாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோர் குணமாகி நேற்று முன்தினம் வீடு திரும்பினர். எனினும் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தநிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் முன் பேத்தி ஆராத்யா, தாத்தா அமிதாப் பச்சனை பார்த்து நீங்களும் விரைவில் வீடு திரும்புவீர்கள் என கூறியுள்ளார். இதுகுறித்து அமிதாப் பச்சன் அவரது வலைதள பக்கத்தில் உருக்கமான தகவலை பதிவிட்டு உள்ளார். அதில் அவர், “சிறியவளும்(பேத்தி), பாகுராணியும்(மருமகள்)… அவர்கள் வீடு திரும்பிவிட்டனர். மகிழ்ச்சி. என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறியவள் அன்புடன், ‘அழாதீங்க நீங்களும் விரைவில் வீடு திரும்புவீர்கள்’ என்றாள் என கூறியுள்ளார்.