பிரபல இயக்குனர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரின் உதவியாளர் புகார் தெரிவித்துள்ளார். 3 இடியட்ஸ், பி.கே., சஞ்சு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. அவர் தனக்கு பல முறை பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

நான் ராஜ்குமார் ஹிரானியை தந்தை போன்று நினைத்தேன். ஆனால் அவர் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி தனது வீட்டில் உள்ள அலுவலகத்தில் இருக்கும்போது ஆபாசமாக பேசினார். பின்னர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தப்பு சார் என்று நான் கூறியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
நீங்கள் அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக இப்படி செய்யக் கூடாது சார் என்று நான் ராஜ்குமார் ஹிரானிக்கு இமெயில் எழுதினேன். என் மனம், உடல், இதயம் ஆகியவை அந்த இரவில் இருந்து அடுத்த 6 மாதங்களுக்கு கொடுமைப்படுத்தப்பட்டது. என் தந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததால் என்னால் வேலையை விட முடியவில்லை.
எனக்கு வேலை தேவை, அப்பாவின் சிகிச்சைக்கு பணம் தேவை. அதனால் ஹிரானி செய்த கொடுமையை எல்லாம் பொறுத்துக் கொண்டேன். அவரின் செய்கைகளை தாங்கவே முடியவில்லை. இருப்பினும் தாங்கினேன். என் வேலை பறிபோவதை விரும்பவில்லை. நான் திடீர் என்று வேலையை விட்டால் சினிமா துறையில் வேறு எங்கும் வேலை கிடைப்பது கடினம்.
ராஜ்குமார் ஹிரானி என்னை பற்றி ஏதாவது தவறாக ஒரு வார்த்தை கூறிவிட்டால் கூட யாரும் என்னை வேலைக்கு சேர்க்க மாட்டார்கள். அவரின் பேச்சை அனைவரும் கேட்பார்கள். என் எதிர்காலமே நாசமாகிவிடும். அதனால் அமைதியாக இருந்தேன் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.
அந்த பெண் தெரிவித்துள்ள புகாரை ராஜ்குமார் ஹிரானி மறுத்துள்ளார். இது தன் பெயரை கெடுக்க திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்று அவர் கூறியுள்ளார். நடிகர்கள் நானா படேகர், ஆலோக் நாத், இயக்குனர்கள் விகாஸ் பெஹல், சஜித் கானை அடுத்து ஹிரானி பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.