அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை 2 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்ஐ.. குவியும் பாராட்டுக்கள்

இந்தியாவில் அடையாளம் தெரியாதவரின் சடலத்தை 2 கி.மீற்றர் தூரம் தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்ஐ புகைப்படம் சமூகவலைத்தளங்கள் வைரலாகி வரும் நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்கு நகராட்சி அடவி கொத்தூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத சடலம் இருப்பதாக பொதுமக்கள் நேற்று பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்ஐ சிரிஷா, சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார். பின்னர் அடையாளம் தெரியாதவரின் சடலத்தை மீட்டு இறுதிச்சடங்கு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது சடலத்தை எடுப்பதற்கு பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை. அதேபோல் சடலம் இருந்த விவசாய நிலப்பகுதி, ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத இடத்தில் இருந்தது.

இதனால், எஸ்ஐ சிரிஷா, அங்கிருந்த ஒரு சிலருடன் சேர்ந்து ஸ்ட்ரெச்சரில் சடலத்தை வைத்து தனது தோளில் சுமந்தபடி சுமார் 2 கிலோமீற்றர் தூரம் உள்ள சுடுகாட்டில் தன்னார்வ அமைப்பினர் மூலம் இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையறிந்த டிஜிபி கவுதம்சவாங் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள், எஸ்ஐ சிரிஷாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!